குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சத்திரம் அருகே விவசாயியை அடித்துக் கொன்றவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயியை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-06 18:45 GMT

விவசாயி மீது தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டி அடுத்த கஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3-ந் தேதி பழனிசாமி புதுச்சத்திரத்தில் இருந்து கஞ்சநாயக்கனூருக்கு மொபட்டில் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த எடையபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் துரைராஜ், பழனிசாமியின் மொபட்டின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் பழனிசாமிக்கும், துரைராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து துரைராஜ், அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். பின்னர் அங்கு வந்த 10 பேர் பழனிசாமி, அவரது மகன் சரவணனுடன் தகராறில் ஈடுபட்டு கைகலப்பாகி உள்ளது. இதில் பழனிசாமி, சரவணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பலி

இருவரும் ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். பின்னர் பழனிசாமி மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே பழனிசாமி இறந்தது கிராமம் முழுவதும் பரவியது. அதைத்தொடர்ந்து பழனிசாமியை அடித்துக்கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பழனிசாமியின் உறவினர்கள் திரண்டனர். மேலும் பழனிசாமி மற்றும் சரவணன் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை பழனிசாமியின் உடலை வாங்க மாட்டோம் என கூறினர்.

சாலை மறியல்

இந்தநிலையில் பழனிசாமியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரத்தில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தாமதிப்பதாக மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். அதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது பழனிசாமியை தாக்கியவர்களில் கல்லூரி மாணவர் துரைராஜ் (22), கூலித்தொழிலாளி சந்துரு (21) ஆகியோரை கைது செய்திருப்பதாகவும், விரைவில் தாக்குதலில் தொடர்புடைய மற்றொருவரையும் கைது செய்வோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட துரைராஜ் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், சந்துரு தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்