ஆட்டையாம்பட்டி அருகேடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்ஒரு மணி நேரத்தில் கடை மூடப்பட்டது

ஆட்டையாம்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திறக்கப்பட்ட அந்த கடை ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது.

Update: 2023-09-30 20:29 GMT

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திறக்கப்பட்ட அந்த கடை ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது.

டாஸ்மாக் மதுக்கடை

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த இந்த கடையை மூடக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் டாஸ்மாக் கட்டிட உரிமையாளரும், கடையை காலி செய்யுமாறு கடந்த 2 ஆண்டுகளாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கடுகுகாரன்காடு பகுதிக்கு இந்த கடையை இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவோடு, இரவாக கடுகுகாரன்காடு பகுதியில் உள்ள கட்டிடத்திற்கு மது பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதையறிந்த அப்பகுதி ெபாதுமக்கள் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆட்டையாம்பட்டி- ராசிபுரம் செல்லும் சாலையில் தங்கள் கைக்குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உஷாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள்,'இந்த மதுபான கடை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேளாண்மை கூட்டுறவு வங்கி போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த கடையால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளதால் கடையை திறக்க கூடாது' என தெரிவித்தனர்.

கடை மூடப்பட்டது

இதையடுத்து போலீசார் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை நிச்சயமாக திறக்கப்படாது என உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது. மேலும் இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்