ராயக்கோட்டை
ஓசூர் அருகே உள்ள தாசனபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது27). பொக்லைன் டிரைவர். இவர் 19 வயது பட்டியலின பெண்ணை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று விட்டார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அப்போது கார்த்திக் ஏற்கனவே 2 பட்டியலின பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி வாழ்வை சீரழித்தது தெரியவந்தது. ஆனால் புகார் அளித்து பல நாட்களாகியும் போலீசார் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தியும், அந்த பெண்ணை மீட்க கோரியும் ஓசூர்-தர்மபுரி சாலையில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்் கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஓசூர்-தர்மபுரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஓரிரு நாட்களுக்குள் பெண்ணை மீட்டு, கார்த்திக் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.