மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய சாலை பணியாளர்கள்
மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை சாலை பணியாளர்கள் கொண்டாடினர்.
உப்பிடமங்கலம் அருகே சாலை ஓர மைல் கல்லுக்கு படையலிட்டு சாலை பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் நேற்றே தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஆயுத பூஜையை கொண்டாடினர். அதன்படி புலியூர் வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், நேற்று உப்பிடமங்கலம் அருகே உள்ள மைல் கல்லை தூய்மைபடுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்தனர். பின்னர் சுண்டல், பொரிகடலை, தேங்காய், பழம் ஆகியவற்றை படையலிட்டு, சாலை பணிக்கு பயன்படுத்தும் பொருட்களை அதன் அருகே வைத்து தீபாராதணை கட்டி வழிபாடு செய்தனர். இதில் சாலை ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.