சாலை விரிவாக்க பணிகளைதலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

Update: 2023-08-12 18:45 GMT

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மோகனூர்-நாமக்கல்- சேந்தமங்கலம்-ராசிபுரம் மாநில நெடுஞ்சாலை முத்துகாப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி வழியாக ராசிபுரம் வரை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இப்பணியானது 31.50 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.171 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சிங்களாந்தபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச்சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

சேந்தமங்கலம் புறவழிச்சாலையில் பொம்மசமுத்திரம் ஏரியில் பாலம் அமைக்கப்பட்டு, மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. பேளுக்குறிச்சி கணவாயில் கனரக வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் சாலையின் வடிவமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு, கொண்டை ஊசி வளைவு மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய ஊர்களில் மழைநீர் வடிகால், பேவர்பிளாக், நிழற்குடை, கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க பிரிவு சாலைகள் அமைத்தும் மேம்படுத்தப்பட்டு, தேவையான அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள், வேகத்தடைகள், கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள் மற்றும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வீதம் 17,210 மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இப்பணிகளை இத்திட்டத்தின் தலைமை பொறியாளர் எம்.கே.செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது கோட்டப்பொறியாளர் சசிக்குமார், உதவி கோட்டப்பொறியாளர் முருகேசன் மற்றும் உதவி பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்