சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
டெல்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்;
டெல்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சோனியாகாந்திக்கு சம்மன்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து அவர் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.இந்த நிலையில் சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியாகிரக போராட்டம்
அதன்படி தஞ்சை மாநகரம், தெற்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் பி.ஜி.ராஜேந்திரன் (மாநகரம்), லோகநாதன் (வடக்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மேலிட பார்வையாளரும், பொதுச்செயலாளருமான பெருமாள் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திருநாவுக்கரசு, ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.
25 பேர் கைது
இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆற்றுப்பாலம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.