சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

Update: 2023-06-08 13:42 GMT

 5 லட்சம் மரக்கன்றுகள்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் சாலையோரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் மூலம் சாலையோரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி தேனியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வைகை அணை-வருசநாடு சாலை

இதேபோல் ஆண்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், வைகை அணையில் இருந்து வருசநாடு வரை மாநில நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதற்கு மகாராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தேக்கம்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள்பட்டி சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சாலையோரத்தில் வேம்பு, புளி, புங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குமணன், உதவிக் கோட்டப் பொறியாளர் திருக்குமரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கம்பம்-கூடலூர் சாலை

தேனி கோட்ட பொறியாளர் குமணன் உத்தரவின் பேரில், உத்தமபாளையம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கம்பம்-கூடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்த இந்த விழாவுக்கு, கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

இதில் உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் வைரக்குமார், சாலை ஆய்வாளர் முருகேசன், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சொக்கராஜார், வார்டு கவுன்சிலர் பார்த்திபன், தி.மு.க.வினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்