சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-08-05 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளுக்கு நாள் வாகன பயன்பாடு, அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப விபத்துகளும் அதிகரிக்கிறது. விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனங்களால் தான் நடைபெறுகிறது. மேலும் விபத்தில் தலையில் அடிப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவ- மாணவிகள் பெற்றோருக்கு சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து கூற வேண்டும். ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தங்கள் பகுதியில் உள்ள 5 குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும் போது சாலை விதிகளை மதிக்க வேண்டும். சைக்கிளில் செல்லும் போது சாலையின் இடதுபுறமாக செல்ல வேண்டும். மாணவ-மாணவிகள் தான் விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஏற்கனவே மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கு ஸ்போர்ட்ஸ் டி-சர்ட் இல்லை என்றும், அதை வாங்கி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டு இருந்தனர். இதை ஏற்று வட்டார போக்குவரத்து அலுவலர் தனது சொந்த செலவில் 100 பேருக்கு ஸ்போர்ட்ஸ் டி-சர்ட் மற்றும் பள்ளிக்கு ஸ்பீக்கர் மைக் ஆகியவற்றை வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்