சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர் கோட்ட தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலம் அருகே புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். மது அருந்தி வாகனங்கள் ஓட்டாதீர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஊர்வலம் துறைமங்கலம், பாலக்கரை வழியாக சென்று நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு வந்து நிறைவடைந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டம், உட்கோட்டங்களின் பொறியாளர் கலைவாணி, உதவி கோட்ட பொறியாளர்கள் மாயவேலு (பெரம்பலூர்), தமிழ் அமுதன் (குன்னம்), பார்த்தசாரதி (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.