ஒகேனக்கல் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து-காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Update: 2023-02-01 18:45 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஒகேனக்கல் அருகே உள்ள ஏரிக்காடு பகுதி காவிரி ஆற்றில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் ஊராட்சி தலைவர் பாஸ்கர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை பணிக்கு குழி தோண்டப்பட்டதால் குழாய்கள் உடைந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைத்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்