பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பாலக்கோடு:
பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட 1, 2, 3, 8, 10 ஆகிய 5 வார்டுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பாலக்கோடு-பெல்ரம்பட்டி சாலையில் திரண்டனர்.
சாலை மறியல்
மேலும் பேரூராட்சி கவுன்சிலர்கள் விமலன், குருமணிநாதன் ஆகியோர் தலைமையில் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து மற்றும் பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம் என்றனர். இதையடுத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக பாலக்கோடு-பெல்ரம்பட்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.