சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்;
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட சாலை வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடங்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தின் போது தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். சட்டம் 2015-ன் படி தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். வியாபாரம் செய்யும் இடத்தை முடிவு செய்வதற்கு வணிகக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் வணிக குழு தேர்தல் நடத்தும் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.