பல்லடத்தில் அரசு பஸ்களை 2 மணி நேரம் நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் மறியல்

Update: 2022-07-06 16:21 GMT


பல்லடம் அருகே தாறுமாறாக கார் சென்றதால் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டது. அரசு பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் மறியலில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும் விபத்து தவிர்ப்பு

உடுமலையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை தாராபுரத்தை சேர்ந்த டிரைவர் அருண்குமார் (வயது 33) ஓட்டி வந்தார். கண்டக்டராக மாரிமுத்து இருந்தார். சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பிரிவில் இருந்து வந்த கார் ஒன்று பஸ் வருவதை கவனிக்காமல் திடீரென உள்ளே புகுந்து பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் திரும்பியது. இதனை பார்த்த டிரைவர் அருண்குமார் உடனடியாக பஸ்சை பிரேக் போட்டு லாவகமாக திருப்பினார். இதனால் கார் மீது பஸ் மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தாக்குதல்

முன்னால் சென்ற கார் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்குள் நுழைந்தது. இதனையடுத்து மண்டபத்தின் முன் பஸ்சை நிறுத்திய அருண்குமார், கண்டக்டர் மாரிமுத்து மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் காரில் வந்தவர்களிடம், இப்படி தாறுமாறாக காரை ஓட்டலாமா, விபத்து ஏற்பட்டு இருந்தால் எவ்வளவு விபரீதம் ஏற்பட்டிருக்கும் என கேட்டுள்ளனர்.

அப்போது காரில் வந்தவர்களுக்கும், பஸ்சில் வந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

சாலை மறியல்

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் திருமண மண்டபம் முன்பு பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது காரை குறுக்காக ஓட்டி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததுடன், பஸ் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

3 பேர் கைது

இது குறித்து அரசு பஸ் டிரைவர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த செல்வகுமார் (26), பிரேம்குமார்(26), சண்முகநாதன்(31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அரசு பஸ் டிரைவர் அருண்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருப்பூர்-கோவை சாலையில் இரவு 11.30 மணிமுதல் 1.30 மணிவரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்