ரூ.34 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
கம்மாத்தி-மேல் சேமுண்டி இடையே தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கம்மாத்தி-மேல் சேமுண்டி இடையே தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாத்தியில் இருந்து மேல் சேமுண்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதேபோல் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்ல வாகனங்களை வேகமாக இயக்க முடியாத நிலை தொடர்ந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
மக்கள் மகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் சாலை சீரமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பணி தொடங்குவதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. இந்தநிலையில் கம்மாத்தி-மேல் சேமுண்டி இடையே தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதற்காக பழைய சாலை உடைக்கப்பட்டது. பின்னர் ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு நிரப்பப்பட்டது. தொடர்ந்து எந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் பிந்து உள்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1½ கி.மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.