பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
குத்தாலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலிக்குடங்களுடன் சாலை மறியல்
குத்தாலம் அருகே உள்ள தொழுதாலங்குடி ஊராட்சி கீழசர்வ மானியம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்ததால் இப்பகுதிக்கு வந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் நிறுத்தப்பட்டது. தற்போது பாலம் கட்டுமான பணி முடிந்த நிலையிலும் குடிநீர் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சேத்திரபாலபுரம்-கோமல் பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க வேண்டும். தங்கள் பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் காவி நிறத்தில் உள்ளது.
1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும். தொழுதாலங்குடி ரேஷன் கடையில் சரிவர பொருட்கள் வழங்கப்படுவதில்லை. கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொழுதாலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், ஊராட்சி செயலாளர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேத்திரபாலபுரம்-கோமல் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.