குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்
அரக்கோணம் அருகே நடந்த விபத்தில் தம்பதி பலியானார்கள். அவர்களின் 3 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
அரக்கோணத்தை அடுத்த வேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). இவர் தனது மனைவி ரூபாவதியுடன் நேற்று முன்தினம் மாலை வேடல் காந்திநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி ரூபாவதி ஆகிய இருவரும் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வேடல் காந்தி நகர் கிராம மக்கள் சாலை விபத்தில் பலியான தீனதயாளன்- ரூபாவதி தம்பதிகளின் குழந்தைகளான விக்னேஷ் (14), அர்ச்சனா (12), தர்ஷினி (8) ஆகிய மூன்று பேருக்கும் அரசு மாத உதவித் தொகை, அவர்களின் வீட்டுக்கு மனை பட்டா, 18 வயது நிரம்பியதும் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் மூவருக்கும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேடல் காந்தி நகர் பகுதியில் அரக்கோணம் - சோளிங்கர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு பின் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த மார்கத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.