தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யக்கோரி சாலை மறியல்

ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடந்தது. அப்போது பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-30 13:37 GMT

கேலி, கிண்டல்

ஒடுகத்தூர் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஒடுகத்தூர் சந்தை மேட்டில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சந்தோஷ் (வயது 22) திரு ஆகிய இரண்டு பேரும் கடையில் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் சந்தோஷ் அந்தவழியாக பள்ளிக்குசெல்லும் ஒடுகத்தூர் சந்தை மேட்டுபகுதியை சேர்ந்த மாணவியை தினமும் கேலி,கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் தலைமை காவலராக பணிபுரியும் திருமால் அவரது அண்ணன் மகன்கள் மதன்குமார், தியாகராஜன் ஆகியோர் சென்று கடையில் இருந்த சந்தோஷிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் சந்தோஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

இந்த நிலையில் சந்தோஷ் அவரது ஆதரவாளர்களுடன் நேற்றுமுதினம் மாலை உருட்டு கட்டைகளுடன் திருமால் வீட்டுக்கு சென்று திருமால் மற்றும் அவரது குடும்பத்தினர் 8 பேரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் மண்டை உடைந்தது. அவர்கல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து திருமாலின் மனைவி ரமா மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் யாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்யவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் சிறைக் காவலரின் குடும்பத்தினரை தாக்கி படுகாயம் அடைவதற்கு காரணமான நபர்களை கைது செய்யக்கோரி திருமாலின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு ஒடுகத்தூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிறைக்காவலர் என்றும் பாராமல் குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தீக்குளிக்க முயற்சி

மேலும் அவர்களை கைது செய்யாவிட்டால் நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி 3 பெண்கள் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் இடமிருந்து மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு கூறுகையில் திருமால் மனைவி ரமா கொடுத்த புகாரின்பேரில் சந்தோஷ், திரு, பாஷா, வானவராயன், மணிகண்டன், சூர்யா, தரணி, வசத் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் அவர்களைத் தேடி வருவதாகவும் விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காலை 10 மணி முதல் மதியம் 1 வரை தொடர்ந்து நடந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்