விரைவு சாலை பணிக்கு மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

சோளிங்கர் அருகே சென்னை- பெங்களூரு விரைவு சாலை பணிக்கு மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-10 18:25 GMT

சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் கிராமத்தில் உள்ள சிவன்கோவில் மலை பகுதியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மண் எடுப்பதால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

எனவே மண் எடுப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 6 மணி முதல் அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிறுத்தம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், ரவி, மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.

பின்னர் கலெக்டர் வளர்மதி, அப்பகுதியில் மண் எடுக்கும் பணியை முற்றிலுமாக நிறுத்துவதாக தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஷான் பாஷா மூலம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்