அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாய்பாபாகாலனி
கோவை மாநகராட்சி 42-வது வார்டு அம்பேத்கர் காலனி, காந்தி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீருக்கு சிரமப்பட்டு வந்தனர்.
இது பற்றி புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்தி ரம் அடைந்த பெண்கள் வேலாண்டிபாளையம் காந்திகாலனி அருகே நேற்று காலை 10 மணி அளவில் அரசு பஸ்சை மறித்து சிறைபிடித்தனர்.
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த குடிநீர் வடிகால் அதிகாரிகள் மற்றும் சாய்பாபா காலனி போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள் கூறுகையில், இரவு நேரத்தில் வந்த வாகனம் மோதி ஆழ்துளை கிணறு பழுதடைந்து ஒரு மாதம் ஆகிறது. இன்னும் சரி செய்ய வில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம் என்றனர்.
அவர்களிடம் ஆழ்துளை கிணற்றை உடனடியாக சரி செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.