நம்பியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

நம்பியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-15 21:53 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

நம்பியூர் பேரூராட்சி 2-வது வார்டு பகுதிக்குட்பட்டது கல்லாங்காடுபாளையம். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பவானி ஆறு மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அரசூர் நீரேற்று நிலையத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து நம்பியூரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நம்பியூர் அருகே உள்ள கோபி-கோவை ரோட்டில் நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கக்கோரி...

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் தீபா தமிழ்ச்செல்வன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'கடந்த 20 நாட்களாக எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மிகவும் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.

இதனால் ஒரு சிலர் அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். வசதியானவர்கள் லாரிகளில் வரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். தண்ணீரின்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம்' என்றனர்.

குழாய் உடைப்பு

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கூறும்போது, 'ஒரு சில இடங்களில் குழாய் உடைப்பு மற்றும் மோட்டார் பழுது காரணமாக கல்லாங்காடுபாளையத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடிவில்லை. உடனே அவற்றை சரிசெய்து உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் கோபி- கோவை ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்