ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்

அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று நாகர்கோவிலில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக 15 பெண்கள் உள்பட 330 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

நாகர்கோவில்:

அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று நாகர்கோவிலில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக 15 பெண்கள் உள்பட 330 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 86 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தியும், ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வு பணபலங்களை வழங்க கோரியும், மரணம் அடைந்த தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். லெட்சுமணன், சோபனராஜ், சின்னன்பிள்ளை, ராஜமார்த்தாண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு தலைவர் ஐவின், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமைப்பு தலைவர் முரளீதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் அந்தோணி, சுரேஷ், சித்ரா, ஜான்ராஜன் மற்றும் மரிய வின்சென்ட், கலா, முருகன், சின்னதம்பி, ராஜேந்திரன், செல்லநாடார், சிங்கராஜன், குஞ்சுமாதவன் உள்பட ஏராளமானோர் மறியலில் கலந்து கொண்டனர்.

சாலையில் படுத்தனர்

அப்போது நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர். இதனால் கேப் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அரசு பஸ்களில் ஏற்றி கோட்டார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். மொத்தம் 15 பெண்கள் உள்பட 330 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்