கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கபிஸ்தலம் அருகே கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-06 18:45 GMT


கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்கள்

கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் பவுண்ட் பஸ் நிறுத்தத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தினசரி கும்பகோணத்துக்கு பஸ்சில் சென்று வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கல்லூரி செல்லும் நேரத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 6 பஸ்கள் கும்பகோணத்துக்கு இயங்கி வந்தன. அது பின்னர் 3 பஸ்களாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த 3 பஸ்களும் கடந்து சில நாட்களாக மிகுந்த காலதாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கல்லூரி மாணவர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் கும்பகோணத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கபிஸ்தலம் பவுண்ட் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், குமார், மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கிளை மண்டல மேலாளர் ரவிக்குமார், இணை மேலாளர் ராஜ்மோகன், கிளை மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது நாளை (அதாவது இன்று) முதல் கூடுதல் பஸ்களை காலதாமதம் இன்றி இயக்குவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக கும்பகோணம்- திருவையாறு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்