ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
பணி நிரந்தரம் செய்ய கோரி ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் கோத்தகிரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி,
பணி நிரந்தரம் செய்ய கோரி ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் கோத்தகிரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணி நிரந்தரம்
அங்கன்வாடி, ஆஷா, ஊராட்சி, தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் ராஜு தலைமை தாங்கினார். குன்னூர் செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஹால்தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள தின சம்பளமான ரூ.450-ஐ நிலுவைத்தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சாலை மறியல்
இதையடுத்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஸ் நிலையம் பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ேகாத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் என 51 பெண்கள் உள்பட மொத்தம் 54 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சற்று நேரம் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தொழிலாளர் நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி, நிதி பலன்களை உயர்த்த வேண்டும். தாய்சோலை எஸ்டேட்டில் 2018-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், நிலுவை சம்பளம், பணிக்கொடை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கும், 50 வயது நிறைவடைந்த பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கும் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.