கும்பகோணம் அருகே சாலை மறியல்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நீர்வளத்துறை அலுவலக கட்டிட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-26 20:41 GMT
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நீர்வளத்துறை அலுவலக கட்டிட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீர்வளத்துறை அலுவலகம்

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை அரசலாறு-நாட்டார் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையே அரசு நீர்வளத்துறை காவேரி பிரிவு சாக்கோட்டை அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு அருகே உள்ள காலியிடங்களில் பழவத்தான் கட்டளை, லாயந்தோப்பு, முல்லை நகர், அம்பேத்கர் நகர், சாக்கோட்டை, கஸ்தூரிபாய் ரோடு, முத்துப்பிள்ளை மண்டபம் போன்ற ஊர்களுக்கு திருவிழாவின்போது காவடி, பால்குடம் எடுத்துச்செல்வது வழக்கம்.

கிராம மக்கள் சாலைமறியல்

நீர்வளத்துறை கட்டிடத்திற்கு முன்புறம் எழுப்பப்படும் 'போர்டிகோ'வால் காவடி எடுத்துச் செல்வது இடையூறாக இருக்கும் என ஆட்சேபணை தெரிவித்து அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நீர்வளத்துறை கட்டிடத்தில் 'போர்டிகோ' கட்டக்கூடாது என கோஷமிட்டவாறு கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்து அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் நாச்சியார்கோயில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




Tags:    

மேலும் செய்திகள்