தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகள் குறைவு- போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்

சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று நடந்த நிகழ்ச்சியில், போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Update: 2023-07-31 13:57 GMT

சென்னை,

டிரைவர்கள் திறம்பட வாகனம் ஓட்டுவதற்கு தரமான பயிற்சி பெறுதல் மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான சிறப்பான அறிவாற்றல் பெறும் வகையில் 3 அடுக்கு பயிற்சி செயல்பாடுகளை சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் தொடங்கியுள்ளது.

சாலையில் வாகனங்களை இயக்கும்போது டிரைவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, நமது நாட்டில் உள்ள ஓட்டுனர் பள்ளிகளில் பயிற்சி மற்றும் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டு வருவதையே இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சியில், போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், சங்கர் ஜிவால் பேசும்போது, "அனுபவம் மற்றும் புள்ளிவிவர ஆய்வுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கிறது. தமிழகத்தில், கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு உள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11 சதவீதமும், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 8 சதவீதமும் விபத்துகள் குறைந்திருக்கிறது. இருப்பினும், விபத்துக்கான 'காரணம் மற்றும் விளைவுகள்' ஒரு புதிராகவே உள்ளது.

கல்வியாளர்கள், குறிப்பாக சென்னை ஐ.ஐ.டி. சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் எடுக்கும் முன்முயற்சிகள், அதை எங்களுக்காக தெரிவித்தால் மகிழ்ச்சியடைவோம்" என்றார். நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, சென்னை ஐ.ஐ.டி. சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் தலைவரும், பேராசிரியருமான வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்