திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதி பெண் சாவு 4 பேர் காயம்
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதி பெண் உயிாிழந்தாா். 4 பேர் காயமடைந்தனா்.
திண்டிவனம்,
கேரள மாநிலத்தில் இருந்து சென்னை அம்பத்தூர் பகுதிக்கு மரகதவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லாரியை கள்ளக்குறிச்சி காந்தி ரோடு பகுதியை சேர்ந்த திருமலை (வயது 42) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, லாரி திடீரென இடது புறத்தில் திரும்பியது.
இதனால், பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில், காரில் வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த திருஞானம் (67), இவருடைய மனைவி கலாவதி (61), தயாளன் மனைவி முத்துலட்சுமி (33), தயாளன் மகள் நிதன்யா (4½), கார் டிரைவரான வேலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் குழந்தை ஹரினி (2) காயமின்றி தப்பியது.
தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.