திருமூர்த்திமலை-சாம்பல் மேட்டில்சாலை அமைக்கும் பணி தீவிரம்

Update: 2023-03-16 15:49 GMT


உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அத்துடன் கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னியர், நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நீச்சல்குளம், அணைப்பகுதி, வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த சூழலில் திருமூர்த்திமலை- உடுமலை பிரதான சாலையில் சாம்பல்மேடு அருகில் இருந்து திருமூர்த்திமலை வரை சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதுப்பிப்பு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாலை சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்போது சாலையின் 2 புறங்களில் மண்ணைக் கொட்டுவது பழைய சாலையை தோண்டி எடுத்து அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தார் கலவையை கொண்டு சாலை அமைக்கும் பணி திருமூர்த்தி மலை கோவில் முன்பு இருந்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் பொதுப்பணித் துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்