பாலக்கோடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்ல சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு

Update: 2022-11-14 18:45 GMT

தர்மபுரி:

பாலக்கோடு அருகே விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

இதில் பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சர்வீஸ் சாலை

பொம்மனூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுற்று வட்டார பகுதியில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை நம்பி உள்ள நாங்கள் விவசாய விளை பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். இதற்காக எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள மல்லுப்பட்டிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தற்போது தர்மபுரி-ஓசூர் இடையே 4 வழி சாலை விரிவாக்க பணி நடக்கிறது. பாலக்கோடு பொம்மனூர் ஏரி அருகே இதற்காக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. எங்கள் சுற்று வட்டார கிராம மக்களின் வசதிக்காக அந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலைகளை அமைத்து தர வேண்டும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வீட்டு மனை பட்டா

பாலக்கோடு அருகே சூடனூர் கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில், சொந்த நிலமோ, வீடோ இல்லாத ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்