4 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடக்கம்

மதுரை-தனுஷ்கோடி இடையேயான 4 வழிச்சாலை திட்டத்தின் கீழ் பரமக்குடி அருகே அரியனேந்தல் முதல் ராமநாதபுரம் வாலாந்தரவை வரையிலான பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Update: 2022-08-14 17:02 GMT


மதுரை-தனுஷ்கோடி இடையேயான 4 வழிச்சாலை திட்டத்தின் கீழ் பரமக்குடி அருகே அரியனேந்தல் முதல் ராமநாதபுரம் வாலாந்தரவை வரையிலான பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

திட்டம்

அகில இந்திய புண்ணியதலமான ராமேசுவரத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மதுரை ராமேசுவரம் இடையே 4 வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக மதுரை முதல் பரமக்குடி அருகே அரியனேந்தல் வரையிலான பாதை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து 4 வழிச்சாலை திட்டத்தினை முழுமைப்படுத்தும் வகையில் அடுத்தகட்ட பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி அரியனேந்தல் முதல் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை வரையிலான 45 கிலோ மீட்டர் தூர சாலை பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஏற்பாடு

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஓரிரு மாதங்களுக்குள் இந்த பணம் வழங்கும் பணிகளை விரைந்து முடித்து அதனை தொடர்ந்து டெண்டர் முடிவு செய்து டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக பெருங்குளம் முதல் மண்டபம் வரையிலான அடுத்த கட்ட சாலைபணிகளையும், மண்டபம் முதல் தனுஷ்கோடி வரையிலான சாலை பணிகளையும் அடுத்தடுத்த கட்டங்களாக தொடங்கி மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

2 ஆண்டு காலம்

பெருங்குளம் முதல் தனுஷ்கோடி வரையிலான அடுத்த 2 கட்ட சாலை பணிகளுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. நில மதிப்பீடு செய்து நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த 4 வழிச்சாலை திட்டத்தின் கீழ் பாம்பன், உச்சிப்புளி, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி அரியனேந்தல் முதல் வாலாந்தரவை வரையிலான சாலை பணிகளை டெண்டர் முடிவு செய்து தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகளை 2 ஆண்டு காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்