கவர்னர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர்: ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 பக்க புகார் கடிதம்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கவர்னர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.

Update: 2023-07-10 00:24 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது.

செந்தில் பாலாஜி விவகாரம்

பல்வேறு விவகாரங்களில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது.

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார். பின்னர் 'டிஸ்மிஸ்' செய்த உத்தரவை நிறுத்திவைப்பதாக ஆர்.என்.ரவி அறிவித்தார்.

மேலும் இந்த உத்தரவு தற்காலிகமானதுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து ஆலோசித்தார். அதேவேளை இந்த சதுரங்க வேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதுர்யமாக காய்களை நகர்த்த தொடங்கி இருக்கிறார்.

19 பக்க புகார் கடிதம்

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 19 பக்க புகார் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை சமூக பொருளாதார வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி தேர்ந்தெடுத்துள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்பவும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, வெளிப்படையாக தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, தமிழ்நாடு அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் பல்வேறு நடவடிக்கைகள், அவர் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை புலப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை கவர்னர் தவறாக பயன்படுத்தக்கூடாது. இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

கவர்னரின் தேவையற்ற பேச்சுகள்

ஊழல் புரிந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. கோரிய அனுமதியைக்கூட வழங்காமல் கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது.

கவர்னரின் ஒப்புதலுக்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் ஊழல் வழக்குகள் தொடர்பான கோப்புகள் நிலுவையில் உள்ளன.

விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துகளை பொதுவெளியில் பரப்பி வருவது அவரது கவர்னர் பதவிக்கு பொருத்தமற்றது. சனாதன தர்மத்தை புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் ரத்தினமான திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும், தமிழ் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள், பேச்சுகளின் மூலமாக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ் மக்களின் உணர்வையும், பெருமையையும் புண்படுத்தி உள்ளார்.

ஆர்.என்.ரவி மக்களின் தலைவர் அல்ல

தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது? என்பதை முடிவு செய்ய ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார். அவர் மக்களின் தலைவரும் அல்ல. நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி. திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்றுஆர்.என்.ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல, அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ஆகும்.

இதுதவிர தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் தமிழ்நாடு என்ற பெயரை, தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தை தெரிவித்த கவர்னரின் செயல் தமிழ்நாட்டின் மீது அவருக்குள்ள அதீத வெறுப்பை யும் காட்டுவதாக அமைந்து உள்ளது. ஏற்கனவே 9-1-2023 அன்று ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தின்கீழ், தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை முற்றிலுமாக மீறும் வகையில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, 7.1.2023 அன்று தான் ஒப்புதல் அளித்த உரைப்பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்தார்.

சமூகநீதி, சுயமரியாதை, அனைவருக்குமான வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், மனிதநேயம், திராவிட மாடல் ஆட்சி போன்ற சொற்களை அவர் வாசிக்காமல் புறக்கணித்தார். பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களை குறிப்பிடுவதையும் தவிர்த்தார்.

மலிவான அரசியலில் ஆர்வம்

இது ஒருபுறம் இருக்க, பொதுவெளியில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும் கிழக்காசிய நாடுகளுக்கு நான் மாநிலத்திற்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய பயணம் மேற்கொண்டிருந்தபோது, கவர்னர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டு பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல பேசினார். ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணியமான கவர்னராக செயல்படுவதை விட, மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெளிவாகி உள்ளது.

15-6-2023 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது துறைகளை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பினேன். அதேவேளை செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதத்தை 15.6.2023 அன்று கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால், எனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று கவர்னர் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதல்-அமைச்சரின் தனிப்பட்ட விருப்பம். இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்று, நான் கவர்னருக்கு இன்னொரு கடிதம் மூலம் தெரிவித்திருதேன்.

மாநில அரசை கவிழ்க்க

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு 7.45 மணிக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் எனக்கு கடிதம் அனுப்பினார். இதுகுறித்து நான் ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, முந்தைய கடிதத்தை நிறுத்திவைக்கும் மற்றொரு கடிதம் கவர்னரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அந்த இரண்டாவது கடிதத்தில், இந்திய தலைமை வக்கீலின் கருத்தை பெறுமாறு உள்துறை மந்திரி அறிவுறுத்தி உள்ளதாக கவர்னர் தெரிவித்திருந்தார். 29-6-2023 அன்றைய தேதியிட்ட கவர்னரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால்தான் அவற்றை புறக்கணித்தோம்.

மத்தியில் ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநில தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பை தேடும் கவர்னரை, வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருத முடியும்.

கவர்னர் பதவிக்கு தகுதியற்றவர்

அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மறுபுறம் எனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், அவரை டிஸ்மிஸ் செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.என்.ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள் மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 156 (1)-ல், ஜனாதிபதி விரும்பும் காலம்வரை கவர்னர் பதவியில் இருப்பார் என்று இருக்கிறது. நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில் கவர்னர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்