காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது: அம்மாபேட்டை பகுதியில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் அம்மாபேட்டை பகுதியில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.
அம்மாபேட்டை
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் அம்மாபேட்டை பகுதியில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.
குடிநீர் வினியோகம்
அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பூதப்பாடி, பூனாட்சி குருவரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள கோம்பூர் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோம்பூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின் அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சுத்திகரிப்பு நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது
இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோம்பூர் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வெள்ளம் வடிந்த பின்னர் நிலையத்தை சுத்திகரித்து குடிநீர் வினியோகம் செய்ய மீண்டும் சில நாட்கள் ஆகும். அதுவரைக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேடான பகுதியில்...
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்களின் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேடான பகுதியில் அமைத்து தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.