மயிலாடுதுறை அருகே, காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம்
மயிலாடுதுறை அருகே, காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம் உள்ளது. இதையடுத்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே, காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம் உள்ளது. இதையடுத்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பாலம் கட்டுமான பணி
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி கடலுடன் கலக்கும் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை எட்டி உள்ளது. மயிலாடுதுறை அருகே மூவலூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ரெகுலேட்டர் (நீர் ஒழுங்கி) மதகுகளுடன் அமைந்துள்ளது. இங்கு உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமான பணி இந்த ஆண்டு மீண்டும் முழுவீச்சில் தொடங்கி உள்ளது.
தண்ணீர் வெளியேறும் அபாயம்
தண்ணீர் வருவதற்குள் பாலத்தின் அடிப்பகுதி கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படும் என்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்திருந்தார்.
பாலம் கட்டுவதற்காக காவிரி ஆற்றின் இடது கரையில் 100 மீட்டர் அளவிற்கு கரை துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் 800 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் முழுவீச்சில் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் கரை துண்டிக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மண் மூட்டைகள்
இதனையடுத்து இடது கரை பக்கம் உள்ள 2 மதகுகளை அடைத்து மீதம் உள்ள 4 மதகுகள் வழியாக தண்ணீர் செல்லும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் தண்ணீரின் வேகம் காரணமாக இடது கரையில் மண் அரிப்பு ஏற்பட தொடங்கியது.
இதனை தொடர்ந்து கரையில் மண் மூட்டைகளை அடுக்கியும், தடுப்பு பலகைகள் அமைத்தும் தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் பாசனத்துக்கு தேவையான அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து திறந்து விடப்படுமா? என்ற கவலை ஏற்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.