ஆற்றங்கரையோர நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம்

திருவாரூரில் பாதுகாப்பற்ற நிலையில் ஆற்றின் கரையோர தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-07-26 17:55 GMT

திருவாரூரில் பாதுகாப்பற்ற நிலையில் ஆற்றின் கரையோர தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வரை உள்ள சாலையின் ஒரு புறம் ஆற்றங்கரையோரம் அமைந்து உள்ளது. இந்த சாலையின் குறுகலான இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஆற்றின் கரையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறம் ஒடம்போக்கியாற்றின் கரையில் அமைந்துள்ளது.

பலவீனம்

இந்த ஆற்றங்கரை பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படவில்லை. ஆற்றங்கரையில் பல இடங்கள் பலவீனமாக காட்சி அளிக்கிறது. அங்கு தடுப்பு எதுவும் அமைக்கப்படவில்லை. சாலையையொட்டி ஆறு செல்வதால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர் நகரின் பிரதான தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் கூட சாலையோர ஆற்றங்கரை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் தடுப்புகள் இல்லாதது பொதுமக்களை வேதனை அடைய செய்து உள்ளது. எனவே விபத்தினை தடுக்கும் வகையில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் சிமெண்டு தடுப்புச்சுவர் கட்டுவதுடன், இரும்பு தடுப்புகளும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்