அரியமான் கடல் பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

உச்சிப்புளி அருகே தடையை மீறி அரியமான் கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-01-29 18:45 GMT

பனைக்குளம்,

உச்சிப்புளி அருகே தடையை மீறி அரியமான் கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

அரியமான் கடற்கரை

உச்சிப்புளி அருகே அமைந்துள்ளது அரியமான் கடற்கரை. மாவட்டத்திலேயே லட்சக்கணக்கான சவுக்கு மரங்களை கொண்டு மிக நீண்ட நெடிய மணல் பரப்புடன் காணப்படுவதுதான் அரியமான் கடற்கரை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் ஏராளமானோர் இந்த கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

அதுபோல் அரியமான் கடல் பகுதி கடல் நீரோட்டம் மற்றும் சீற்றமாக உள்ள பகுதியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி அரியமான் கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு கடலோர போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்பலி அபாயம்

இந்த நிலையில் அரியமான் கடல் பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தடையை மீறி அங்கு வைத்துள்ள எச்சரிக்கை பலகைையயும் பார்த்தும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கடலில் இறங்கி குளித்து வருவது தொடர்கின்றது. குறிப்பாக கரையிலிருந்து மிக நீண்ட தூரம் வரையிலான கடல் பகுதியில் ஆபத்தான முறையில் ஆண்களும் மற்றும் பெண்களும் குளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுப்பதற்கோ அங்கு கடலோர போலீசார் ஒருவர் கூட பாதுகாப்பு பணியில் இல்லாததுடன் அரியமான் கடற்கரையில் புறக்காவல் நிலையம் பெரும் பாலான நாட்களில் மூடியே கிடக்கின்றது.

எனவே அரியமான் கடல் பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால் உயிர்பலி ஏற்படும் முன்னர் இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கடலோர போலீசார் அரியமான் கடற்கரை பகுதியில் பகல் நேரங்களில் முழுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்