தீப்பிடித்து எரிந்த காரை அகற்றாததால் விபத்து அபாயம்
சிறுமலை மலைப்பாதையில், தீப்பிடித்து எரிந்த காரை அகற்றாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 55). அவருடைய நண்பர் வரதராஜன் (34). இவரது மனைவி நாகநந்தினி (24). கடந்த 6-ந்தேதி இவர்கள், திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர். காரை டிரைவர் அருண்தமிழன் (25) என்பவர் ஓட்டினார். சிறுமலை மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் காா் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென கார் தீப்பற்றியது. இதையடுத்து காரை விட்டு கீழே இறங்கிய 4 பேரும் உயிர் தப்பினர். சிறிதுநேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட கார், 9-வது கொண்டை ஊசி வளைவிலேயே நின்று கொண்டிருக்கிறது. இதனால் இரவுநேரத்தில் வாகனங்களில் செல்வோர் அதன் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். எனவே விபத்துக்கு வித்திடும் வகையில் மலைப்பாதையில் நிற்கும் காரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமலை கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.