ஏழை, நடுத்தர மக்களை பாதித்த விலைவாசி உயர்வு

பட்டாசு முதல் பலகாரங்கள் வரை விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-19 16:41 GMT

பட்டாசு முதல் பலகாரங்கள் வரை விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பலகாரங்கள்

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகளோடு பலகாரங்களும் முக்கிய அங்கம் வகிக்கிறது. தீபாவளி பலகாரங்கள் என்றாலே பெரும்பாலும் வீடுகளில் மகிழ்வோடு தயாரித்து, சுவைத்து மகிழ்வது தான் என்பது காலம் காலமாக இருந்து வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது. கடைகளில் வாங்கிக்கொள்வது பலருக்கும் சவுகரியமாக இருக்கிறது. அதற்கு விலைவாசி உயர்வு முக்கிய காரணமாக உள்ளது.

குறிப்பாக ஏழை, நடுத்தர மக்கள் கூட வீடுகளில் பலகாரம் செய்யும் முயற்சியை கைவிடும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுக்கவும், பட்டாசு வாங்கச் செல்லும் இடங்களிலும், மளிகை கடைகளுக்கு சென்று வந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதுபோன்ற கட்டுப்பாடுகள் ஒருபுறம், கொரோனா ஊரடங்கு கால பொருளாதார இழப்பு, வேலையின்மை போன்ற காரணங்கள் மறுபுறம் என தீபாவளி கொண்டாட்டத்தின் மகிழ்வை குறைத்தன.

விலைவாசி உயர்வு

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் கொரோனா கட்டுப்பாடு இல்லாத தீபாவளியை மக்கள் கொண்டாட இருக்கிறார்கள். அதோடு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாள் தான். இணைந்து வரும் விடுமுறை நாட்களில் வீடுகளில் பலகாரங்கள் செய்யலாம் என திட்டமிடும் மக்களையும், முடிவுகளை மாற்ற வைத்துள்ளது விலைவாசி உயர்வு.

தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு உளுந்து, கடலைப்பருப்பு, வெல்லம், சர்க்கரை, மைதா மாவு, கடலை மாவு, எண்ணெய், நெய் போன்றவை முக்கிய தேவையாக உள்ளது. ஆனால், இதுபோன்ற பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

கடைகளில் ஆர்டர்

பண்டிகை காலத்தையொட்டி தற்போதும் சில பொருட்களின் விலையில் ஏற்ற, இறக்கம் உள்ளது. இதுபோன்ற காரணத்தால் ஏழை, நடுத்தர மக்கள் கூட வீடுகளில் பலகாரம் செய்யும் முடிவை கைவிட்டு, கடைகளில் வாங்கிக்கொள்ள ஆர்டர் கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில்லரை பலசரக்கு கடைக்காரர்களும் அதிக முதல் போட்டு பலகாரங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு, மக்களிடம் வாங்குவதற்கு ஆர்வம் இல்லாததை கண்டு கவலையில் உள்ளனர்.

பலசரக்கு பொருட்களை போன்று பட்டாசு விலையும் உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகரித்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் விரும்பிய பட்டாசுகளை வாங்கி வெடிக்க நினைத்தாலும், அவர்களின் குடும்ப பட்ஜெட் கையை கடிக்கும் நிலைமை உருவாகி உள்ளது. இதனால், ஆர்டர் பலகாரம், அளவான பட்டாசு என்பதே பெரும்பாலான குடும்பங்களின் தீபாவளி திட்டமிடலாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பட்ஜெட் பாதுகாப்பு

நிவேதா (குடும்பத்தலைவி, உப்புக்கோட்டை):- தீபாவளி என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். என்ன பலகாரம் செய்யலாம் என்று ஒருவாரத்துக்கு முன்பே திட்டமிடுவோம். ஆனால், பலகாரம் செய்வதற்கான பொருட்களின் விலைவாசி உயர்வு, பட்டாசு விலை உயர்வு போன்றவை பட்ஜெட் போட்டு வாழும் மக்களையும் கடன் வாங்கி பண்டிகை கொண்டாட வேண்டிய நிலைமைக்கு தள்ளும் வாய்ப்புள்ளது. உளுந்து பயன்படுத்தி பலவிதமான பலகாரம் செய்யலாம். ஆனால், அதன் விலையை பார்த்தால் பலகாரம் செய்யும் எண்ணமே போய்விடுகிறது. இந்த விலைவாசி உயர்வோடு கியாஸ் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், வீட்டில் பலகாரம் செய்வதை விடவும், கடைகளில் வாங்கிக்கொள்வது பட்ஜெட்டை பாதுகாப்பதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்றே தோன்றுகிறது.

ஹேமலதா (பேக்கரி கடை உரிமையாளர், கடமலைக்குண்டு):- தீபாவளி பண்டிகை காலங்களில் முன்பதிவு பெற்று பலகாரங்கள் செய்து கொடுத்து வருகிறோம். கடமலைக்குண்டு கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி. இருந்தாலும் பலரும் பலகாரங்கள் செய்ய முன்பதிவு கொடுக்கின்றனர். விலைவாசி உயர்வு, நேரமின்மை போன்றவை பலகாரங்களை வீடுகளில் செய்வதை தவிர்க்க காரணமாக இருக்கிறது. இதனால், எங்களை போன்ற தொழில் செய்பவர்களுக்கு இதுபோன்ற பண்டிகை காலங்களில் தான் வருவாய் ஈட்ட முடிகிறது. அதே நேரத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பலகாரங்கள் விலையை உயர்த்திவிடவும் முடியவில்லை. குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் பலகாரங்களை செய்து கொடுக்கிறோம். விலைவாசி குறைந்தால் எங்களை போன்ற தொழில் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வியாபாரிகளும் பாதிப்பு

ராமராஜ் (சில்லரை பலசரக்கு வியாபாரி, தேனி):- மக்கள் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்துள்ளது. அதற்கு நேரமின்மையும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ உளுந்து ரூ.120-க்கு விற்றது. தற்போது ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பருப்பு, வெல்லம், சர்க்கரை விலையில் தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பாமாயில், ரீபைண்ட் ஆயில் போன்றவை விலை குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் ரூ.150-ல் இருந்து ரூ.130 ஆகவும், ரீபைண்ட் ஆயில் ரூ.180-ல் இருந்து ரூ.150 ஆகவும் குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே வாங்கி இருப்பு வைத்துள்ள வியாபாரிகளுக்கு இந்த விலை வீழ்ச்சி பாதிப்பை கொடுத்துள்ளது. பண்டிகை காலங்களில் வீடுகளில் பலகாரம் செய்யும்போது ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது.

முருகன் (வர்த்தகர், கம்பம்):- மொத்த வியாபாரிகள் விலையை உயர்த்தும்போது, சில்லரை வியாபாரிகளும் உயர்த்தும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் மளிகை கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்குவது குறைந்து, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களை நாடிச் செல்வது அதிகரித்துள்ளது. மக்களின் பார்வையில் பண்டிகை காலங்களில் விலை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. விலைவாசி உயர்வு வியாபாரிகளையும் சேர்த்து தான் பாதிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்