தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழை இலைக்கட்டு விலை உயர்வு
தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழை இலைக்கட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழை இலைக்கட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
வாழை இலை
தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழை இலைக்கட்டுகள், வாழைத்தார்கள் விற்பனைக்காக வருகின்றன. இந்த மார்க்கெட்டுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை இலைகளை வாங்கி செல்கின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்பனையான வாழை இலைக்கட்டுகள் விலை உயரத் தொடங்கியது. வளர்பிறை முகூர்த்தம் மற்றும் கோவில் விழாக்களை முன்னிட்டு வாழை இலை, வாழைத்தார் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் விலை உயர்ந்து உள்ளது.
விலை உயர்வு
இதனால் நேற்று பெரிய இலைக்கட்டுகள் ரூ.4 ஆயிரம் வரை அதிகரித்து விற்பனையானது. மேலும் அவ்வப்போது மழை பெய்யத் தொடங்கி இருப்பதால் வாழை இலை வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வாழை இலைக்கட்டுகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்று கதலி வாழை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்பட்டு இருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த பல வாழைகள் தற்போது காற்று காரணமாக சேதம் அடைந்து உள்ளன. இதனால் கதலி வாழை வரத்து குறைந்து உள்ளது. கதலி வாழைத்தார் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று சக்கை ரூ.450-க்கும், நாடு ரூ.500-க்கும், பூலான்செண்டு ரூ.550-க்கும், கோழிக்கூடு ரூ.300 முதல் ரூ.350-க்கும், செவ்வாழை ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.