நெல் நாற்றங்கால் பாதிப்பு

திருவெண்காடு பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் நாற்றங்காலை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-14 18:45 GMT

திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப் பெருந்தோட்டம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 800 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் நாற்றங்காலில் விதை நெல் விட்டிருந்தனர்.

அந்த விதைநெல் முளைத்திருந்த நிலையில், திடீரென நாற்றுகள் காய்ந்தும், அழுகியும் தோற்றமளிக்கின்றன. இதனால், இப்பகுதியில் நடவுப் பணிகள் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் அதன் அருகில் உள்ள அள்ளிமேடு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி கிராம தலைவர் வீராசாமி மற்றும் பொறுப்பாளர்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டதே இல்லை. விவசாயத்திற்கு மிக முக்கியமாக விளங்குவது நாற்றுகள். அதனைக் கொண்டுதான் நடவு செய்ய வேண்டும். இப்போது திடீரென நாற்றுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் நாற்றங்கால் தயார் செய்து விதை விடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதனால் விதை நெல் விலை, ஏர் உழுதல் உள்ளிட்ட செலவுகளை மீண்டும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

ஆகவே, இப்பகுதியில் என்ன காரணத்தால் நாற்றுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்