மாவட்டத்தில் 14 ஆயிரம் எக்டேரில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

மேட்டூர் அணை 100 அடியை எட்டியதால் மாவட்டத்தில் 14 ஆயிரம் எக்டேரில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-01-20 18:30 GMT

விவசாயிகள் ஆர்வம்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேல் இருந்து வந்தது. இதனால் அணையில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் டெல்டா பகுதிஎன அறியப்படும் மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர்.

மேலும் காவிரி பாசனம் இல்லாத பகுதிகளிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளங்கள், ஏரிகள், ஆழ்குழாய் கிணறுகளில் ஓரளவுக்கு நீர் தேங்கியது. அதன் காரணமாக சக்கரக்கோட்டை, காணியாளன்பட்டி, க.பரமத்தி, தாந்தோன்றிமலை, கடவூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சம்பா பருவத்திற்கான நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 13 ஆயிரம் எக்டேரில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்றது. தற்போது இந்தாண்டு 14 ஆயிரம் எக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்து இருந்தனர். இந்நிலையில் இலக்கை விட கூடுதலாக 14 ஆயிரத்து 25 எக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. சில பகுதிகளில் நவீன எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மகசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.

மேலும் குளித்தலை அருகே மையிலாடி செல்லும் பகுதியில் உள்ள விளைநிலத்தில் நெல் அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்