கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேன்களில் கடத்த முயன்ற 6½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 3 பேர் கைது

பொதுவிநியோகத்திட்ட அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-19 19:45 GMT

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேன்களில் கடத்த முயன்ற 6½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 ரேஷன்அரிசி

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், கோவை மண்டல எஸ்.பி பாலாஜி மேற்பார்வையில் பொதுவிநியோகத்திட்ட அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மணிகண்டன் மற்றும் போலீசார் குருபரப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வேன்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 90 மூட்டைகளில் 4½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேன் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கட்டிகானப்பள்ளி மணிகண்டன், பொன்மலைக்கோவில் பகுதியை சேர்ந்த லோகேஷ் ஆகியோர் என்பதும், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேன்கள், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன்கள் மற்றும் அரிசி உரிமையாளர்களான முனியப்பன், அமரேஷ், வசந்த், பரத் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது-பறிமுதல்

இதே போல், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி அருகே புதூர் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடகாவுக்கு 41 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து வேன் டிரைவர் கார்த்திக்கை கைது செய்யப்பட்டார். மேலும் வேன் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் மற்றும் அரிசி உரிமையாளரான கோவிந்தராஜ், காளியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்