அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைகிறதா?, அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பருவமழை
மேலும் பருவ மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசுகையில், மாவட்டத்தில் வடிகால்வாய்களை சத்தம் செய்து தூர்வாரி ஆழப்படுத்தவும், தேங்கிய மழைநீரினை எந்திரங்களை கொண்டு அகற்றவும் அறிவுறுத்தினார்.
மேலும், மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லலிதா பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்னும் ஓரிரு நாட்களில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கொள்ளிடம் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் முருகண்ணன், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், உதவி கலெக்டர்கள் அர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கவிதாபிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மஞ்சுளா மற்றும் தாசில்தார்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.