சேலத்தில் ரூ.8 கோடியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டுமான பணிகள் மருத்துவத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
சேலத்தில் ரூ.8 கோடியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை மருத்துவத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
சேலம்:
ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் 32 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ரூ.8 கோடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, சின்னகொல்லப்பட்டி, சொர்ணபுரி, ரெட்டிப்பட்டி குமரன்நகர், மணக்காடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மருத்துவத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அரிசிப்பாளையத்தில் ரூ.80 லட்சத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
அடிப்படை வசதிகள்
அப்போது, ஒவ்வொரு மையத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, நலவாழ்வு மையம் அமைய உள்ள கட்டிடத்தின் பரப்பளவு, பணிகள் முடிவுறும் காலம் மற்றும் கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்தும், நலவாழ்வு மைய கட்டிடம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முதன்மை செயலாளர் செந்தில்குமார் கேட்டறிந்தார்.
மேலும், அருகில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது குறித்தும், நலவாழ்வு மையத்தில் பணியாளர்கள் பணிபுரிவதற்கான போதுமான இடவசதி மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகர நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.