வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-06 19:15 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குபேட்டையிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், எசனை ஊராட்சியிலுள்ள நியாய விலைக்கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்தும், அந்த நியாய விலைக்கடையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, வேப்பந்தட்டையிலுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சுவைத்துப் பார்த்தார். அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி முறையாக உணவு வழங்கப்படுகின்றதா?, அரசின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா? என்பது குறித்து கேட்டறிந்தார். எசனை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தகத்தினை பார்வையிட்டு, போதிய அளவிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனைப் பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இதுவரை வரப்பெற்ற மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, எத்தனை விசாரணையில் உள்ளது. எத்தனை நிலுவையில் உள்ளது என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து, மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். முன்னதாக வேளாண்மை பொறியியல்துறை சார்பில் தனிநபர் எந்திரம் மானியத்தில் வழங்குதல் திட்டத்தின் கீழ் பயனாளி ரெங்கராஜிக்கு ரூ.3,97,000 அரசு மானியத்துடன்கூடிய ரூ.7,95,000 மதிப்பிலான டிராக்டரை அனில்மேஷ்ராம் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்