வருவாய்த்துறையா-காவல்துறையா? - மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்தபின் விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு? - விரிவான விசாரணையை கையில் எடுக்கும் மதுரை ஐகோர்ட்டு 3 நீதிபதிகள் அமர்வு

மணல் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் குறித்து விசாரிப்பதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை மதுரை ஐகோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கையில் எடுக்கிறது.

Update: 2023-02-27 20:53 GMT


மணல் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் குறித்து விசாரிப்பதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை மதுரை ஐகோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கையில் எடுக்கிறது.

குவாரி வாகனங்கள் பறிமுதல்

நெல்லை பாளையங்கோட்டை அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல் குவாரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாறைகள் சரிந்து விபத்து நடந்தது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் சிலர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. அதன் உரிமையாளர்களும் கைதானார்கள்.

இந்தநிலையில் குவாரியை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி அதன் உரிமையாளரான குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், எங்கள் குவாரி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். நாங்கள் குவாரியை நடத்தவில்லை. குவாரியை குத்தகைக்கு விட்டிருந்தோம். இதனால் குவாரியை தொடர்ந்து நடத்தவும், வாகனங்களை விடுவிக்கவும், வங்கி கணக்கை செயல்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

3 நீதிபதிகள் விசாரணை

இந்த வழக்கை ஏற்கனவே ஐகோர்ட்டு விசாரித்த போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், சுரங்கம் மற்றும் கனிமவளச் சட்டப்படி வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் வருவாய்த் துறையினருக்குத்தான் உள்ளது. கோர்ட்டு உத்தரவுகளிலும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அரசாணையில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாக வருவாய்த்துறையினருடன், போலீசாரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் இதில் இறுதி முடிவு எடுக்க இந்த வழக்கு 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கு 3 நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி, முரளி சங்கர் ஆகிய 3 நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மணல் கடத்தி செல்லும் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரிப்பதற்கு போலீசாருக்கு அதிகாரம் இல்லை.

அதே சமயம், எங்களுடைய குவாரிக்கு சொந்தமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

விரிவான விசாரணை

இதைத் தொடர்ந்து அரசு வக்கீல் ஆஜராகி, மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரருக்கு சொந்தமான வாகனங்களை மீட்க சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டை அணுகி உரிய பரிகாரம் தேடலாம். இந்த வழக்கு இங்கு நிலுவையில் உள்ளது என்பதற்காக சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க காத்திருக்க வேண்டியதில்லை என்றனர்.

மேலும், மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அது சம்பந்தமான விசாரணையை நடத்துவதற்கான அதிகாரம் வருவாய்த்துறைக்கு உள்ளதா? அல்லது காவல்துறைக்கு உள்ளதா? என்பது சம்பந்தமான விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்