தீபத் திருவிழாவுக்காக புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவிற்காக புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் மாட வீதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-11-19 12:47 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவிற்காக புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் மாட வீதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சாமி வீதிஉலா மற்றும் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால் இந்த கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

அதனால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவறை கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் 7-ம் நாள் விழாவன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் நடைபெறும்.

சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம்

கடந்த 2 ஆண்டுகளாக தேர்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவற்றின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சுப்பிரமணியர் தேர் மட்டும் ரூ.30 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தேர் பீடத்தின் மேல் பகுதியில் உள்ள அலங்கார கால்கள், மேல் அடுக்குகள் ஆகியவை முற்றிலுமாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

சுப்பிரமணியர் தேர் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்து உள்ளதால் அந்த தேரை வெள்ளோட்டம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதனை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியை சுற்றி வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.

வெள்ளோட்டத்தின் நிறைவாக தேரின் உறுதித் தன்மை சரிபார்க்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளால் சான்று வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்