ஓய்வு பெற்ற பேராசிரியரை அடைத்து வைத்து மிரட்டல்
குடிநீர் கேன் விற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஓய்வு பெற்ற பேராசிரியரை அடைத்து வைத்து மிரட்டிய 3 பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பீளமேடு
குடிநீர் கேன் விற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஓய்வு பெற்ற பேராசிரியரை அடைத்து வைத்து மிரட்டிய 3 பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடிநீர் விற்பனை நிறுவனம்
கோவை ஆவாரம்பாளையம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் பிரேம் சங்கர். இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், அஸ்வின், பிராங்ளின் ஆகியோரை பங்குதாரர் களாக சேர்த்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி கேன் குடிநீர் விற்பனை நிறுவனத்தை தொடங்கினார்.
இந்தநிலையில் பங்குதாரரான சண்முகம் சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை என்று தெரிகிறது. இதை அறிந்த பிரேம்சங்கர் குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறியதாக தெரிகிறது.
ஆனால் சண்முகம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
3 பேர் மீது வழக்கு
எனவே பிரேம் சங்கர் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தார்.
இதை அறிந்த சண்முகம், அஸ்வின், பிராங்ளின் ஆகியோர் பிரேம்சங்கரை நிறுவனத்துக்கு வரவழைத்தனர். அவர், வந்ததும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து பிரேம் சங்கரை நிறுவனத்திற்குள் அடைத்து வைத்து மிரட்டினர்.
அங்கு இருந்து வெளியேறிய அவா் கொடுத்த புகாரின் பேரில் சண்முகம், அஸ்வின், பிராங்ளின் ஆகிய 3 பேர் மீதும் பீளமேடு போலீசார் மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.