ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
கோவையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
கோவையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
மருத்துவ காப்பீடு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள விதவை, விவாகரத்து, ஊனமுற்றோர் குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம், கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு கோவை தலைவர் சி.வி.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வி.மைக்கேல், செயலாளர்கள் ராமச்சந்திரன் (கோவை), சுந்தரசேன் (குந்தா கிளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகவிலைப்படி
போராட்டத்தில் கூடலூர் கிளையை சேர்ந்த காட்பிரோ மேத்யூ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சட்டையை கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக பங்கேற்றனர். அதுபோன்று பெண்கள் வாயில் துணியை கட்டியபடி கலந்துகொண்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற எங்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். இது குறித்து கேட்டால் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.