ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரெயில் மோதி சாவு

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-17 19:53 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

நாகர்கோவில் இடலாக்குடி ஆனைப்பாலம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் நேற்று மாலை ஒரு ஆண் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ராஜ், பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிவில்லை.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் சுசீந்திரம் ஆஞ்சநேயர் 8-வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் நாயர் (வயது 67) என்பதும், இவர் குமரி மாவட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இவர் தினமும் ஆனைப்பாலம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

ரெயில் மோதி சாவு

அதன்படி நேற்று மாலை ஆனைப்பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சந்திரசேகர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்