ஜலகண்டாபுரம் அருகே நிலத்தகராறில் பயங்கரம்: ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் கொலை 2 மகன்கள் வெறிச்செயல்

ஜலகண்டாபுரம் அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட 2 மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-19 20:14 GMT

மேச்சேரி, 

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓய்வு பெற்ற பஸ் டிரைவர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஜலகண்டாபுரம் ஆடையூர் கிராமம், குடியானூர் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 64). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து, 2-வது மனைவி ராேஜஸ்வரியுடன் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி சோரையான் வளவு பகுதியில் தற்போது வசித்து வந்தார்.

சீரங்கனுக்கு முதல் மனைவி மூலம் சரவணன் (35), ராஜ்குமார் (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சீரங்கனுக்கு சொந்தமாக அந்த பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரித்து கொடுப்பதில், அவருக்கும், அவரது 2 மகன்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கொலை

இந்த நிலையில் நேற்று காலை சரவணன், ராஜ்குமார் ஆகியோர் சீரங்கனை சந்தித்து, சொத்து குறித்து பேச சூரப்பள்ளி சோரையான் வளவு வீட்டுக்கு வந்தனர். அப்போது சீரங்கன் இங்கு எதற்கு வந்தீர்கள்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் சீரங்கனை தாக்கியதுடன், கீழே தள்ளியதாக தெரிகிறது. கீழே விழுந்ததில் சீரங்கனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் விரைந்து வந்து சீரங்கனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரது மகன்கள் சரவணன், ராஜ்குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சொத்து தகராறில் தந்தையை மகன்களே கொலை செய்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்