காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி உருவப்படத்துக்கு மரியாதை

பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-01-30 18:45 GMT

பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

காந்தி நினைவு தினம்

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். இந்த யாத்திரை நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கட்சி கொடி ஏற்றி, ராகுல் காந்தி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதுதவிர மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி கொடி கம்பத்தின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காந்தி உருவப்படத்துக்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மண்டல தலைவர் பி.வி.டி.ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுதவிர கொக்கிரகுளம் கட்சி அலுவலகத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராகுல்காந்தி நடை பயணம் நிறைவையொட்டி கட்சி கொடியேற்றப்பட்டது.

சிலைக்கு மரியாதை

நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவில் அருகே காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மண்டல தலைவர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.பி.டி.அழகேசன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா, மாவட்ட பிரதிநிதி சரத் கண்ணன், வர்த்தக அணி செயலாளர் ஞானசேகர், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கட்சி தலைவர் சரத்குமார், மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக எழுதிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அருள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம், சி.ஐ.டி.யு. ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், நகர செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு தரப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் நெல்லை வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு அந்த வழியாக சென்ற வாகனங்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தினார்கள். பின்னர் 2 நிமிடங்கள் அனைத்து வாகனங்களும் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு, பொது மக்களால் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்